Pages

Friday, March 23, 2012

உலகம் ரொம்ப சின்னது


[இக்கதை நடைபெறும் வருடம் 2008]


Ён псіхічнымі засмучэннямі 
(அவன் ரொம்ப மன கஷ்டத்துல இருக்கான்)

ок. адправіць яго ў сваім жаданні
(சரி அப்போ அவன் ஆசைப்படியே போகட்டும)

மனதில் எதோ நினைத்தபடியே அமர்ந்திருந்தான் கந்தசாமி, அப்பொழுது அருகிலே அந்த குரல், "உத்தரவு வந்தாச்சு. உன் ஆசை படியே நாம் போகலாம்"

"நாம? நான் மட்டும் போகலியா... நீங்க எதுக்கு? "

"உனக்கு உதவியாக "

"எங்க ஊருல எனக்கு எதுக்கு உங்க உதவி"

"நான் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன்... உன்னுடன் நான் எழு பகல் எழு இரவு இருப்பேன், அதற்குள் இங்கயே நீ திரும்ப வரவேண்டும் என்று நினைத்தால்  என்னுடனேயே வந்து விடலாம் ."

"நான் ஏன் திரும்ப இங்க வரணும் "

"ஏழாம்  இரவு முடிந்ததும் சொல், எல்லாம் தயார் நாம் கிளம்பலாம்"


***********

நீண்ட பயணத்திற்கு பிறகு, வர வேண்டிய இடம் வந்தது ....

எல்லாமே புதிதாய் இருந்தது, முற்றிலுமே புதியதாய். அதிசயமாய் அத்தனையும் பார்த்து கொண்டிருந்த அவனுக்கு அது இன்னும் அதியசமாய் கண்ணில் பட்டது, அந்த திரைப்பட போஸ்டர்.

"அடடே பில்லா படமா.. நூறாவது நாளா, ரஜினி மாதிரி தெரியலையே, கிட்ட போயி பாப்போம் "

ரோட்டினை   தாண்டி போய் பார்க்க நினைத்தான் கந்தசாமி. தனது வலது காலை ரோடில் வைத்ததும் 'ஷர்ர்ர்ரர்ரர்ர்ர்ர்' என் வந்து நின்றது ஒரு 'ஷேர்' ஆட்டோ.

'யோவ் ஓரமா நிக்க தெரியாதா, வர்றது கண்ணுக்கு தெரியல'

முன் வைத்த காலை பின் வைத்து, வைக்காத காலையும் பின் வைத்து இரண்டடி பின்னே வந்தான் கந்தசாமி.   

திடீரென நினைவுகள் பின்னோக்கி சென்றது ....

"ஹே அப்பா வந்துட்டாங்க..."

"அப்பா அப்பா ஒரு ரவுண்டுப்பா "

சைக்கிளை பூட்டுவதர்க்குள் கத்தி கொண்டே அருகில் வந்து, நச்சரிப்பு ஆரம்பமானது.

"டேய் பாத்து போங்கடா...  சைக்கிள கோழி மேல எதவாது விட்டுடாதீங்க.  பெல் அடிச்சிகிட்டே போகணும் ."

மீண்டும் நிகழ்காலம் வந்தான் கந்தசாமி ...

இவன் ஹாரனே அடிக்கலையே கண்ணு தெரியலைன்னு வேற திட்டுறான்

"ம்ம்ம் ... நெறையா வண்டி இதே மாதிரி இருக்குதே ... குதுர வண்டி எல்லாம் இப்ப இல்ல போல ..."

" ஆமாம் கந்தசாமி. குதுர வண்டியெல்லாம் இப்பொழுது இல்லை  ... "

" யேய்,   நீ ஏன் என் கூடவே வர்ற .... நான் எங்க ஊருக்கு போகணும், அதான் விட்டாச்சு இல்ல , ஏன் இன்னும் கூடவே வரணும் ... போ... போயிட்டு எழு நாள் கழிச்சு வா"

"இதுதான் உன் ஊர் ... உன்னை இங்கே இருந்துதான கொண்டு போனோம்...  அதுவும் இல்லாமல் நான் யார் கண்ணுக்கும் தெரிய மாட்டேன். உன் கண்ணுக்கு மட்டும்தான் தெரிவேன்"

முகத்தில் சிறிதாய் ஆச்சர்யத்தை வரவழைத்த கந்தசாமிக்கு பதில் வந்தது ...

"ஆமாம் உன்னை கொண்டு போனதுமே உன்னுடுடைய கருவிழிய மாற்றிவிட்டோம். அதனால்தான் உனக்கு மட்டும் நான் தெரிவேன்"

"வேற என்னல்லாம்யா மாத்திருக்கீங்க ..."

"வேற ஏதும் இல்ல ..."

***********

வெயில் மிகவும் அதிகமாய் இருந்தது  ... அருகில் இருந்த கடைக்கு சென்று ,

"அண்ணன் குடிக்க தண்ணி வேணும் "

"சில்லுன்னா ", என்றார் கடைக்காரர்.

"ஆமா "

"இருவத்தஞ்சு ரூபா "

"என்னது குடிக்கற தண்ணிக்கு காசா"

மூன்று பத்து ரூபாய் தாழ்கள் அவன் கையில் தந்து, "எதுவும் பேசாமல் குடுத்து விட்டு வா", என்றான்.

காசை கொடுத்து பாட்டிலை கையில் வாங்கியதும் , " நாங்க திருவிழால ஒரு ஊருக்கே நீர் மோர் இலவசமா ஊத்துனோம், இவன் என்ன இத்துனூண்டு தண்ணிக்கு காசு கேக்குறான்"

" எப்போ "

" ம்ம்ம்... நீங்க என்ன கடத்துறதுக்கு முன்னாடி"

" நாங்கள் கடத்தவில்லை  சோதனைக்கு எடுத்து சென்றோம்"

அந்த வேற்றுகிரகவாசி சொல்ல சொல்ல கந்தசாமி அந்த சம்பவத்தை மீண்டும் நினைத்து பார்த்தான் ...

அப்போ எனக்கு 11 வயசு .அது 1980-ம் வருடம் பிப்ரவரி மாதம், முழு சூரிய கிரகண நாள். அதனால் காலையிலுருந்து எதுவுமே சாப்பிட அம்மா தரலை. கிரகணம் முடிஞ்சதும் குளிச்சுட்டுதான் எதுவும் சாப்பிடனும்னு சொல்லிட்டாங்க. சமைக்க கூட இல்லை.

நான் செஞ்சது பெரிய தப்பு. அம்மாக்கு தெரியாம கடைல போயி முறுக்கு வாங்கி சாப்டலாம்னு நெனச்சது தப்பா போயிடுச்சு. நான் கடைக்கு வந்து பாத்தா, கடையும் இல்ல. அடுத்து என்ன பண்றதுன்னு யோசிக்கிறப்போதான் இந்த வேற்றுகிரகவாசிகள்  என்னை புடிச்சிக்கிட்டு போய்ட்டாங்க ...

"சரி இப்போ எங்க போகணும் ", அந்த வேற்றுகிரிகவாசி கேட்ட போதுதான் அவன் மீண்டும் நிகழ்காலம் வந்தான்.

"எங்க வீட்டுக்கு போகணும் ". அவனுக்கு தெரியும் இந்த முப்பது வருடத்தில் நிச்சயம் அவன் தாய் தந்தை இறந்திருப்பர் என்று.

அவன் வீடு இருந்த இடத்தில இப்பொழுது சிறு சிறு கடைகளும் பெரிய பெரிய கட்டிடங்களும் வந்து விட்டன . தான் இழந்ததை நினைத்து மனம் அழுதாலும் கண்களில் நீர் வரவில்லை, அதெல்லாம் அந்த கிரகத்திலேயே தீர்த்துவிட்டான்

"உன் தங்கை கவிதா இருக்குமிடம் தெரியும் வா போகலாம் "   என்றான் அந்த வேற்றுகிரகவாசி.

அவன் மீண்டும் தன் இளமை கால நினைவுகளில் மூழ்கினான்

***********

அவன் தங்கையின் இல்லம்.

அங்கே சென்றால் அவன் தங்கை நல்ல குடும்பத்துடனும் வசதியுடனும்தான் வாழ்ந்து வந்தாள். கந்தசாமி, அவன் தங்கையிடம், நடந்தவை எல்லாம் கூறினான். அனால் அவளும் அவள் கணவனும் அதனை நம்ப மறுத்தனர்.இவன் கூறிய சிறு வயது கதை எதுவும் அவளுக்கு நினைவில்லை. பாவம் அப்பொழுது அவள் ஐந்து வயதே. சுற்றும் பார்த்தான் தன் தாய் தந்தையாரின் புகைப்படம் கூட கண்ணில் படவில்லை.

அவள் போன் செய்து அத்தை மாமா ஆகியோரையும் வரவழைத்தாள். அவர்களுக்கும் சில சம்பவங்கள் நினைவிருந்தாலும், இவனை நம்ப மறுத்தனர். ஏதேதோ காரணம் சொல்லி அவன் சொல்வதை ஏற்க மறுத்தனர்.   அனைவரும்  இவனை எதோ பைத்தியம் என்று நினைத்தனர். 

அவர்கள் அனைவரும் கந்தசாமியை  உடனடியாய் வெளியே போக  சொன்னார்கள் .

இப்போ என்ன செய்வதென்று ஒரு நிமிடம் திகைத்தாலும் ... கவிதாவுக்கு எப்படியாவது புரிய வைத்துவிடலாம் என்றும், தனது மற்ற சொந்தங்களை பார்த்தால் யாரவது அவனை நம்புவார்கள் என்று நம்பினான். ஆனாலும் திரும்ப தன் உலகிற்கு வந்தது அவனுக்கு சந்தோசம்தான் என்று நினைத்தான்.

வாசலை விட்டு இறங்கிய போது உள்ளே அவர்கள் பேசியது அவன் காதுகளை எட்டியது.
"அது உண்மையாலுமே கந்தசாமியா இருந்தாலும், இப்போ இப்படி வந்து நின்னா நாம என்ன பண்றது. நமக்கு இருக்கற பிரச்சினையே பாக்க நேரம் இல்ல, இதுல இப்படி ஒரு பிரச்சனை வேற தேவையா... பாக்கவே எதோ பரதேசி மாதிரி, சொல்றதும் புரியல பேசறதும் புரியல"
இதை பேசிய குரல் யாருடையது என்று தெரியவில்லை ஆனால் கந்தசாமியை மின்னலாய் தாக்கியது அவர்கள் எண்ணம்...
   
அவனுக்கு அந்த வேற்றுகிரகவாசி மேல் பயங்கர ஆத்திரம் வந்தது

"உங்களாலதான் என் வாழ்க்கையே போச்சு... ஏன்டா இப்படி செஞ்சீங்க என்ன..."

இவன் பேச பேச அந்த வேற்றுகிரகவாசி எதோ ஒரு டப்பாவை திறக்க...

"வேணாம்... வேணாம்... " என்றே மயங்கினான்.

***********

அவன் கண் விழித்து பார்த்த போது ஆள் ஆரவாரமே இல்லா இடத்தில் படுத்து கிடந்தான்.

"என்ன... திரும்பவும் உங்க இடத்துக்கே வந்தாச்சா... " மிகவும் சலித்துக்கொண்டான்.

"இல்ல. இனி உன் விருப்பம் இல்லாம உன்னை நாங்கள் கொண்டு  போகமாட்டோம் "

" எதுக்குயா என்ன கடத்துனீங்க.  என்னோட வாழ்க்கையே இப்போ பெரிய கேள்வி குறியாகிடுச்சு.  நீங்கதான் எல்லாத்தையும் பாத்தீங்களே. என்னை யாருக்குமே தெரியல.  எதோ பைத்தியகாரன் மாதிரி பாக்குறாங்க."

" நாம் இங்கு வந்து ஒரு இரவு ஒரு பகல்தான் முடிந்தது. அடுத்த இரவில் உனக்கு எல்லாவற்றையும் நான் சொல்கிறேன். அதற்குள் வா நாம் உன் ஊருக்கே போகலாம். உனக்கு எங்கே எப்படி வாழ விருப்பம் என்று முடிவு செய், அதற்கான வழிகளை நான் சொல்கிறேன்."

அவனுக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது கூடவே பசியும் வந்தது. அந்த நகருக்குள் கொண்டுவந்தது அந்த வேற்றுகிரகவாசி.

ஒரு கடையில் இட்லி  கிடைக்கும் என எழுதியிருந்தது.  அங்கே சென்று பார்த்தான். இரண்டு இட்லி பத்து ருபாய் என எழுதி இருந்தது. அவனுக்கு பத்து இட்லிகள் ஒரு ரூபாய்க்கு வாங்கிய நினைவு இருந்தது. இருந்தாலும் இன்றை விலைவாசி ஏற்றத்தை கணக்கு போட்டுக்கொண்டே சாப்பிட சென்றான்.

ஒரு தட்டில் இரண்டு இட்லியும் அத்துடன் சிறு கப்பில் சாம்பாரும் சட்னியும் வந்தது.

"இது வேண்டாம் , இதில் உள்ள பொருட்கள் உனக்கு பாதிப்பை ஏற்படுத்தும்."

"என்ன சொல்றீங்க"

"அதை முகர்ந்து பார் "

அந்த இட்டிலியில் பாலிதீன் பேப்பர் வாசனை அடித்தது.

"அந்த பேப்பர்தான். உஷ்ணத்தில் உருகி உணவில் ஒட்டியுள்ளது. அதை உண்ண வேண்டாம்."

தலை வாழையிலை இட்டு அதில் ஐந்து இட்டிலிகளை அடுக்கி அதனுடன்  கரண்டி நிறைய குழம்பு விட்டு, கறியுடன் அவன் தாய் பரிமாறியதும், அந்த பச்சய வாசனையுடன் இன்னும் அவனுக்கு பசுமையாய் நினைவுக்கு வந்தது.

"இலை எல்லா இல்லையா , வேற கடைக்கு போலாமா", அப்பாவியாய் கேட்டான்.

"இங்க எல்லாமே இப்படிதான்", என்று சிரித்தபடியே பதில் வந்தது.

***********

அன்றைய நாள் முழுவதும் அந்த ஊர் முழுக்க சுற்றினான் நிறைய மாறியிருந்தது. மனிதர்கள் இன்யந்திரங்களுடன் இயந்திரமாக இணைந்திருந்தனர். தன் தங்கை வீட்டில் நடந்தது இன்னும் அவனை பலகீனமாக்கியது.

மீண்டும் அவன் வீடு இருந்த இடத்துக்கே வந்தான்.

அவன் ஓடி ஆடிய தெருக்கள், ஊஞ்சல் கட்டி விளையாடிய மரங்கள், தாவி குதித்த  ஓடை என்று எதுவுமே இன்று இல்ல. அவன் விளையாடிய தெருக்களில் நடக்கவே சிரமப்பட்டான். வாகனங்களின் புகையும் சத்தமும் அவனை இன்னும் எரிச்சல்படுத்தியது .

மாலை வேலையில் அவன் மனதாலும் உடலாலும் மிகவும் சோர்ந்திருந்தான். இளைப்பாற இடம் தேடியது மனது.

"என்ன இளைப்பாற வேண்டுமா "

ஆமாம் என்பது போல் தலையாட்டினான்.

அந்த வேற்றுகிரகவாசி கந்தசாமியை தூக்கி கொண்டு வெகு வேகமாயோ பறந்தான். ஒரு மலை உச்சியில் அவனை இறக்கி விட்டன.

இவன் களைப்பை போக்க சில மருந்துகளை அளித்தான் அந்த வேற்றுகிரகவாசி.

**********

ஓய்வெடுத்த பின் கொஞ்சம்  தெம்பாய் இருந்தது ...

அந்த மலை உச்சியில் இருந்து நகரத்தை பார்த்தான், அது சோடியம் போர்வையை போர்த்தியிருந்தது.

நகரத்தின் அசுர வளர்ச்சியை கண்டு மிரண்டே போனான்...

வேற்றுகிரகவாசியிடம்,   "எதோ சொல்லல போறேன்னு சொன்னீங்க ..."

"உன் எண்ண  ஓட்டம் எனக்கு புரிகிறது.

எங்க கிரகம் பேரு Flotaus (ஃபளோட்டஸ்). செவ்வாய் (Mars) கிரகத்துக்கு  வியாழன் (Jupiter) கிரகத்துக்கு இடையில்  உள்ளது. இன்னும் உங்கள் மனித இனம் எங்கள் கிரகத்தை கண்டுப்பிடிக்கவில்லை, ஆனால் நெருங்கிவிட்டார்கள். உங்கள் உலகத்தை பற்றி நாங்கள் நிறைய  படித்துவிட்டோம். அதன் ஒரு பகுதி ஆராய்ச்சிக்குத்தான் உன்னை கொண்டு சென்றோம். நாங்கள் கொண்டு சென்ற முதல் மனிதன் நீதான். அங்கே மனிதர்கள் வாழ முடியும் என்று நிரூபித்தவனும் நீதான்.

ஒவ்வொரு முறை உங்க செயற்கைகோள்கள் எங்கள் கிரகத்தை பற்றி  தகவல் அனுப்பும் போதும் அதனை நாங்க மறித்து தகவலை மாற்றி  அணுப்பிடுவோம். அவைகளுக்கு அறிவியல்தான் தெரியுமே தவிர அறிவு இல்லையே...

நாங்கள் இங்கே வரும்பொழுது யாருடைய கண்களுக்கும் தெரிய மாட்டோம். ஆனால் அதையும் மீறின சில சமயம் எங்களை பார்த்துவிடுவீர்கள், அல்லது  போட்டோ எடுத்துவிடுவீர்கள்... இவையெல்லாம் உங்கள்  இனம் எங்களை  நெருங்குவதற்கான அறிகுறி ."

"அதெல்லாம் சரி என்ன வெச்சு எதுக்கு ஆராய்ச்சி பண்றீங்க  "

"நீதான் பார்த்தாயே.... ஒவ்வொரு இயற்கை வளமா நீங்க உங்க சுயநலத்துக்கு அழிக்கறீங்க... உங்க மனித இனம் இப்போ அழிவு நோக்கி வேகமா இன்னும் வேகமா பயணிக்குது. அது இங்க இருக்கற ஆராய்ச்சியாளர்களுக்கும்  தெரியும். உங்க 2012 - ல அந்த அழிவு தொடங்கலாம்னு அவங்க நம்புறாங்க. .   அதனால் ஒரு பெரிய குழு வேறு கிரகத்துல வாழ முடியுமான்னு தேடிகிட்டு இருக்கு. சீக்கிரம் அவர்கள் எங்கள் கிரகத்தையும் அங்கே வாழ முடியும் என்பதையும் கண்டுபிடித்துவிடுவார்கள். அப்பொழுது அவர்கள் அங்கே வந்தால்  எங்களை அழித்துவிடுவார்கள், அதற்க்குத்தான் உன்னை கொண்டு  போய் இன்னும் நெருக்கமாக மனிதர்களை   படித்தோம், அவர்கள் எங்களை தாக்கும் பொழுது  எப்படி எதிர்ப்பது என்றும்  தெரிந்துகொண்டோம்."

இந்த செய்திகளுடன், அவன் மனதில் இரண்டு நாட்களாய் கண்ட காட்சிகளும்   ஓடியது ... தம் உறவினர்களே பைத்தியம் என்று கூறியதும் வேண்டாம் என்று நினைத்ததும் இன்னும் கஷ்டமாய் இருந்தது..

" ச்சே உலகம் எவ்ளோ மாறிடுச்சு"

" இல்லை.  இந்த உலகம் இன்னும் சுற்ற அதே 24 மணி நேரம்தான் எடுத்துகொள்கிறது, ஆனால் இந்த மனிதர்கள்தான் அதனை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள், மாற்றிவிட்டார்கள்."

"அடுத்த நாலு தலைமுறை நல்லா இருக்கணும்னு நெனைச்ச மனுஷங்க இப்போ நான் மட்டும் நல்ல இருந்தா போதும்னு நெனைக்க ஆரம்பிச்சுட்டாங்க..."

"அதுதான் இந்த உலகம் அழிய போவதற்கான ஆரம்பம் ..."

கந்தசாமியோ மனதில், "இத எல்லாம் பாக்கத்தான் இவங்கள திரும்ப கொண்டுவந்து விட சொன்னோமா" என்று கலங்கினான். 

தெளிவான குரலில், " ம்ஹ்ம்... என்னை திரும்ப  கூட்டிட்டு போய்டுங்க.. என்னால இங்க கண்டிப்பா வாழ முடியாது ... அங்க வந்தா உங்களுக்காவது உதவியா இருக்கும்..."

"நன்றாக யோசித்து சொல்... உனக்கு இன்னும் அவகாசம் உள்ளது"

" இல்லை, நான் யோசிக்க விரும்பல... நாம போகலாமா ", என்றான்.

நொடிகளில் அவர்கள் பயணிக்க வாகனம் வந்தது ...

அவர்கள் ஏறியதும், அது ஃபளோட்டஸ் நோக்கி பயணத்தை தொடங்கியது, ஒளி வேகத்தில் ...

கந்தசாமி உலகையே பார்த்துக்கொண்டு வந்தான்...

தூரமாக  செல்ல செல்ல உலகம் ரொம்ப சின்னதாகி கொண்டே போனது.
**************

3 comments:

  1. Very Nice :) அடுத்த நாலு தலைமுறை நல்லா இருக்கணும்னு நெனைச்ச மனுஷங்க இப்போ நான் மட்டும் நல்ல இருந்தா போதும்னு நெனைக்க ஆரம்பிச்சுட்டாங்க..."

    "அதுதான் இந்த உலகம் அழிய போவதற்கான ஆரம்பம் ..." Liked these lines #fact

    ReplyDelete
  2. Looks like done quite some research and preparation for writing this short story ... Good imagination. Shows the current state of human minds. Good one @sweetsudha1

    ReplyDelete
  3. quite interesting...

    ReplyDelete