Pages

Tuesday, May 28, 2013

சாமி சத்தியமா

 திருச்சி வெயில் உயிரை உறிஞ்சுகொண்டிருந்த மதிய நேரம்.
ஆஸ்பத்திரி வாசலில் அந்த சவாரியை இரக்கிவிட்ட மனோகர், அந்த சவாரி கொடுத்த காசை வாங்கி சட்டை பாக்கெட்டில் வைக்க போகும் முன் சட்டையில் இருந்த மொத்த பணத்தயும் எடுத்து எண்ணினான்...
மொத்தம் 800 ரூபாய் இருந்தது, அதில் 500 எடுத்து வண்டியில் இருந்த ஒரு பெட்டியில் போட்டான். 150 எடுத்து தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்து கொண்டான். தினமும் இப்படி எடுத்து வைத்துகொள்வது அவன் பழக்கம்.

60 வயது மதிக்கதக்க ஒரு பெரியவர் வந்துகொண்டிருந்தார்.அவர் உடல் மட்டுமல்ல தலை முடியும் கூட முற்றிலுமாய் வெள்ளை உடை அணிந்திருந்தது. அவர் ஆட்டோவிற்க்குத்தான் வருகிறார் என்பதை அவரது தளர்ந்த நடை உணர்தியது.

"தம்பி, சத்திரம் பஸ் ஸ்டாண்ட்"
"போலாங்க"
"எவ்ளோப்பா"
"120"
"வேணாம்பா" என்று சாலை நோக்கி நடக்க ஆரம்பித்தார் .
மனோகர் மனதுக்குள் ஒரு குரல், அவர கூப்பிடு கூப்பிடு என கூவியது.

"பெரியவரே கொரச்சுகலாம், வாங்க"
வேணாம் என்று சைகை மூலமே கூறி நடயை தொடர்ந்தார்...
மீண்டும் மனதுக்குள் கூப்பிடு கூப்பிடு என்று குரல் கேட்க, சட்டென்று ஆட்டோவை ஸ்டார்ட் செய்து போய் அவர் அருகே நிறுத்தி,
"எவ்ளோ தற்ரீங்க"
"வேணாம்பா என்ட்ட காசு கம்மியாதான் இருக்கு"
"அதான் எவ்ளோ தருவீங்க"
"50"
"இந்த வெயில்ல எவ்ளோ தூரம் நடப்பீங்க, 75 குடுங்க போலாம்"
"இல்லாபா என்ட்ட அவ்ளோ காசு இல்ல"
"சரி 50 ரூபாவே குடுங்க, வாங்க போலாம்", காலேஜ் ரோடு அருகே இருக்கும் சிறிய ரோட்டின் வழியாக சென்றால் நஷ்டமில்லை என்று கணித்தான்.
"வேணாம்பா, அப்பறம் நீ அங்க வந்து உங்க ஆளுங்கல கூட்டி வெச்சுகிட்டு ஜாஸ்தியா கேட்டா என்னால தர முடியாது"
"நான் அப்படியெல்லாம் இல்லீங்க 50 போதும் வாங்க"
***
காலேஜ் ரோடு, எது நடக்க கூடாது என்று நினைத்தானோ அதே நடந்தது.
ரெயில்வே கேட் மூடியிருந்தது.
"நேரம் ஆகுதுங்கலா, நாம வேணா சுத்தி வந்து பாலத்து வழியா போயிடலாமா"
"வேண்டாம்பா, அவசரம் இல்ல"
எங்கே சுத்தி வந்த பின் ஜாஸ்தி காசு கொடுக்கணுமோ என பயந்து போனார் அந்த பெரியவர்.
வண்டியை ஆஃப் செய்தான்.
"தம்பீ, நீங்க குடிப்பீங்களா", சிறிது நேர சிந்தனையில் இருந்த பெரியவர், அவராகவே ஆரம்பித்தார்.
தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த 150 ரூபாயை தொட்டு பார்த்து, மனதுக்குள் சிரித்து கொண்டே.. " இல்லை" என்று பொய் சொன்னான்.
"நல்லது தம்பி, நானெல்லாம் உங்க வயசுல தெனம் குடிப்பேன். கூலி வேலைதான், மிச்சம் ஆகுற காசு எல்லாத்துக்கும் குடிச்சேன்.அப்பலாம் எம்புத்தியே வேலை செய்யாது, குடிக்க காரணம் கண்டு புடிக்க மட்டும் நல்லா வேலை செஞ்சுது. ஒடம்பு அலுப்பு போக குடிச்சேன்னு நானே சொல்லிக்கிட்டேன்.
இப்ப பாருப்பா எம்பொஞ்சாதிக்கு எதோ வியாதியாம். ரத்தத்த சுத்தப்படுத்தணுமாம், இல்லேன்னா உயிருக்கே ஆபத்தாம். 30 ஆயிரம் கிட்ட ஆகுமாம். அவ்ளோ கொடுக்க நான் இப்ப எங்க போவேன். நான் எவ்ளோ குடிச்சாலும் அடிச்சாலும் கூடயே இருந்தா, என் புள்ள கூட எவ்ளோ கூப்ட்டும் அவன் கூட போகலயே.
நான் குடிச்ச காசெல்லம் இருந்திருந்தா இன்னைக்கு அவள நல்லா பாத்துகிட்டுருப்பேன்.
குடியால செத்தவன் கோடி பேரு, ஆனா குடிய விட்டதால செத்தவன்னு எவனும் இல்ல.
இன்னைக்கு என்னோட குடி பழக்கம் அவள கொன்னுகிட்டு இருக்கு."
மனோகருக்கு இதயமே ஒரு நொடி நின்றது, அவன் மனைவியும் மகளும் கண் முன்னே வந்து சென்றனர்.
***
பஸ் நிலையத்தில் அந்த பெரியவரை இறக்கி விட்ட மனோகர் காசே வாங்காமல் ஸ்டாண்டுக்கு சென்றான்.
அங்கே சதிஷ், "மனோகரு இன்னைகு கச்சேரி கீலப்புதூர் கடயில, 10 மணிக்கு வந்துடு"
"இல்லயா, வீட்டுக்கு போகனும்"
"ஏன்"
"இனிமே குடிக்க வர்ல"
"திடீர்னு?"
"குடியால செத்தவன் கோடி பேரு, ஆனா குடிய விட்டதால செத்தவன்னு எவனும் இல்ல"
இருவரும் அதற்கு மேல் ஒரு வார்த்தையும் பேசவில்லை.
மனோகர் நல்லவன்தான், மனைவி பிள்ளை மேல் பாசம் நிறைய கொண்டவன்தான், ஆனாலும் அவன் எவ்வளவோ முயற்சி செய்தும் குடியை விட முடியவில்லை.
***
"லட்சுமி.."
"என்ன இன்னைக்கு சீக்கிரமா அதுவும் தெளிவா"
"ஆமா"
அவனிடம் இருந்த 500 ரூபாயை எடுத்து, எப்பொழுதும் டீவு காசு வைக்கும் டப்பாவில் வைத்து விட்டு,
"இன்னொரு டப்பா குடேன்" என்று பாக்கெட்டில் இருந்த 150 ரூபாயை எடுத்தான்.
"இது எதுக்கு"
" நான் குடிக்க வெச்சுருந்த காசு, இனிமே இதையும் சேத்து வெக்க போறேன், இனிமே குடிக்க மாட்டேன்"
பேசுவது புரியாமால் சீக்கிரமாய் வீட்டுக்கு வந்த அப்பாவை சிரித்துகொண்டே பார்த்தாள் மனோகரின் மகள்.
"நெஜமாவா" என்றாள் லட்சுமி.
"சாமி சத்தியமா"
"நான் வேண்டிக்கிட்ட முருகன் என்ன கை விடல" என்றபடியே அவனை இழுத்து கொண்டு சென்று, சாமி படத்துக்கு முன்,
"கும்புட்டுக்கோங்க", என்றாள்.
அவளுக்கு அங்கே தெரிந்த முருகரின் படத்தில் அவனுக்கு தெரிந்தது அந்த பெரியவரின் முகம்தான்.
***

1 comment:

  1. அருமையான கதை ... தொடர்ந்து எழுதுங்கள் :-) @sweetsudha1

    ReplyDelete