Pages

Monday, January 30, 2012

தவளகுப்பம்

கடலூர் பஸ் ஸ்டான்ட். பஸ்ல அதிகம் கூட்டம் இல்ல. மூனாளு சீட்ல இவன் மட்டும் தனியா ஜன்னலோரம் உட்காந்தான். நாளைக்கு காலைல பாண்டில ஒரு இன்டர்வியூ, நைட்டே போயி ஜீவா ரூம்ல தங்கிட்டு காலைல நேரமா ரெடியாகி போகணும்.

பஸ், ராஜீவ் காந்தி காலேஜ தாண்டுனதும் ஒரு பெரியவர் இவன் சீட்டுல வந்து உக்காந்தாரு. ஆனா இவன் கண்டுக்கல.லேசா கலைஞ்ச தலை, நாலு நாள் வெள்ளை தாடி,ஒல்லியான ஒடம்பு, எப்படியும் அறுபது வயசிருக்கும்.

அந்த பெரியவர், கண்டக்டர்ட்ட, "தவளகுப்பம்". கண்டக்டர் கொஞ்சம் கடுப்பா, "ஆறு ரூபா சில்லறையை குடு". இவர் பத்து ருபாய் நோட்டை நீட்டிகிட்டே, "சில்லறை இல்லப்பா, வேணும்னா ஒரு ரூபா இருக்கு"-னு சொல்ல, அதுக்கு கண்டக்டர் எதோ சொல்ல, இவன் ஹெட்போனை எடுத்து காதுல மாட்டிக்கிட்டான்.. ஆனா எதோ பாட்டு கேட்க பிடிக்கல, கொஞ்ச நேரத்துல கலட்டிட்டான்.

இப்போ அந்த பெரியவர் எதோ புலம்பிகிட்டிருந்தாரு.இவன் பாக்குறது தெரிஞ்ச பெரியவர், இவன்ட்ட திரும்பி,
"சார் மணி என்ன"
"9.30"
"சார் இவன்லாம் பெரிய வேலைல இருக்கேன் நெனப்புல இப்படி பேசுறான், நான் படிக்கலதான் அதுக்காக இப்படியா பேசுறது.."
இவன் ஆர்வமே இல்லாம தலையாட்டுனான்....
அவர் இன்னும் எதோ சொன்னாரு, ஆனா இவன் காதுல விழவே இல்ல, இருந்தாலும் ஆமாங்கற மாதிரி தலையாட்டுனான்.அவர் கண்டக்டரை பத்திதான் எதோ சொல்றார்னு மட்டும் புரிஞ்சுது..

"இதெல்லாம் நான் பேரபுள்ளைங்களுக்கு வாங்கிட்டு போறேன் "
அவர் காட்டுன பிளாஸ்டிக் கவரில் ஒரு பொட்டலம் மிட்சர் ரெண்டு பாக்கெட் மில்க் பிக்கிஸ் பிஸ்கட்டும் தெரிஞ்சுது.
"இதே நூறு ரூபா ஆச்சு"
"இப்பதான் பெரிய மவ வூட்லருந்து வறேன், இந்தா தவளகுப்பத்துலதான் சின்ன மவ வூடு. பெரியவ காலைலதான் போகணும்னா... அங்க படுக்க கூட எடமில்ல எப்புடி இருக்கறதுன்னு நானே கெளம்பிட்டேன். மாப்ள காலேஜ் பக்கத்துல பொட்டிகடை வெச்சிருக்காரு, ஆனா வீடு வசதின்னு ஒன்னும் பெருசா பண்ணிக்கள. அந்த புள்ளைங்களும் தாத்தா தாத்தான்னு கால சுத்தி ஒண்ணும் கழுத்த சுத்தி ஒண்ணும் கெடக்குங்க, என்ன பண்ண."

"சின்ன மவளும் மாப்ளையும் தோட்டம் வச்சினு ஓட்டிட்டுருக்காங்க. எனக்கும் தோட்டமெல்லாம் இருக்கு சார், மல்லாட்ட பயிறுதான் போட்ருந்தேன், இந்த மழைல எல்லாம் போய்டுச்சு.. ஆத்தாக்காரி அழுதுட்டே இருந்தா அதான் பொங்கலுக்கு புள்ள வூட்டுக்கு போடின்னு அனுப்பிச்சிட்டேன், இங்க சின்ன மவ வூட்லதான் இருக்கா."

கண்டக்டர் இப்போ அவர தாண்டி போறத பாத்துட்டு,
"சார் நீங்க என்ன வொர்க் செய்றீங்க"
"கடலூர்ல வேலைக்கு இருக்கேன்"
"அதில்ல, என்ன சம்பளம் வரும், ஒரு நாளைக்கு.. இல்ல ஒரு மாசத்துக்கு "
"பத்தாயிரம் ரூபா "
"இவன்லாம் எவ்வளவு சம்பளம் வாங்குவான், என் காட்ல கூலி குடுக்கற காசு சார், சில்லறைக்கு போயி அப்பிடி பேசுறான். என் மவன் திருநவேலில எஸ்.ஐயா இருக்கான் ஒரு போன் அடிச்சா போதும், இவன் என் கால்ல உழுவான்."

"சார், நான் இப்படி கொஞ்ச அழுக்கான சட்ட போட்ருக்கன்னுதான் இப்புடி பேசுறான், மனுஷன மதிக்கணும் சார் காசு பணத்த இல்ல"
இப்போ அவர் இவனை சார்னு  சொல்றது என்னவோ மாதிரி இருந்துச்சு...
"நீங்க என்னைய சார்னெல்லாம் சொல்ல வேணாம்யா"
இவன் சொன்னத அவர் கண்டுக்கவேயில்லை...
"ஏதோ இந்த வருஷம் கொஞ்சம் கஷ்டம்... நாங்கல்லாம் மண்ண நம்பி இருக்கவங்க தம்பி".
எதோ மேல பாத்தாரு, திரும்பி இவன பாத்து...
"மனுஷங்கதான் செத்து போவாங்க... மண்ணு சாகாது தம்பி..."
அதுக்குள்ள தவளகுப்பம் வர, "சரி தம்பி வரேன்". சொல்லிக்கிட்டே அவரு எறங்க தயாரானாரு.

பத்து நிமிஷத்துல அவர் வாழ்க்கை கதையவே சொல்லிட்டு போய்ட்டாரே, வெள்ளந்தியான மனுஷன் ...
காத்துல அவன் கையில இருந்த நோட்டு பக்கம்  லேசா திரும்ப, நாளைக்கு இன்டெர்வியூக்காக 4 மணி நேரம் அவன் யோசிச்சு பதில் தயார் செஞ்சு வைச்சிருந்த கேள்வி கண்ணுலபட்டுது
"Tell me about yourself..."

[BASED ON A TRUE EXPERIENCE]

No comments:

Post a Comment