Pages

Monday, April 2, 2012

உயிர்

ராம் - மைதிலி. இவர்களுக்கு திருமணம் நடந்து மூன்று வருடம் ஆகிறது..

ராம், தனியார் கம்பெனியில் போதுமான சம்பளத்துடன்தான் வாழ்ந்து வந்தான். அவனும் அவன் தாய் பார்வதிக்கும் அது போதுமானதாய் இருந்தது . அவன் தந்தை சிறு வயதிலேயே இறக்க அவன் தாய்தான் அவனுக்கு ஒரே சொந்தம்.

மைதிலி வந்ததும் தேவைகள் அதிகமானது. இன்னும் இன்னும் என தேவைகள் வளர்ந்து கொண்டேதான் சென்றது. என்ன கேட்டாலும் கிடைக்கும் வீட்டில் வளர்ந்த மைதிலிக்கு இவன் கணக்கு பார்த்து செலவு செய்வது பிடிக்கவில்லை.

மைதிலி தன் தேவைகளுக்காக அவள் தந்தையிடம் பணம் வாங்குவதை கௌரவ குறைச்சலாக கருதிய ராம், தனியாக கம்பெனி தொடங்க முடிவு செய்தான். தன் தந்தை விட்டு சென்ற ஒரே வீட்டை அடமானம் வைத்து, வங்கியில் கடன் வாங்கி ஒரு பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யும் பேக்டரி ஆரம்பித்தான்.

தொடக்கத்தில் ஓரளவு சுமாராக போனது. ஆனாலும் அவன் சம்பளம் வாங்கிய அளவுதான் லாபம் வந்தது. போக போக எப்படியும் பிக்கப் ஆகி நல்ல வருமானம் வரும் என்று நம்பினான். ஆனாலும் அவன் எதிர்பார்த்ததை விட வளர்ச்சி மெதுவாகவே இருந்தது.

மைதிலியோ அவள் தோழிகளுடன் ஊர் சுற்றுவதைதான் பெரிதாய் நினைத்தாள், அவளுக்கு அதுதான் சந்தோசம் தருவதாய் சொன்னாள். வரும் பணத்தை பொறுப்பில்லாமல் செலவழித்துவிட்டு இன்னும் வேண்டும் என்பாள்.

மணமான ஒரே வருடத்தில் அவனுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவன் தாயின் மரணம். அது அவனுக்கு மிகப்பெரும் இழப்பாய் இருந்தது.

இப்பொழுது அவனின் ஒரே சொந்தம் மைதிலிதான். ஆனால் அவளோ  இவனை பற்றி பெரிதாய் கவலையேபடவில்லை. இவள் விருப்பப்படி அவன் இல்லை நெட்று அவள் அவனை மதிப்பதே இல்லை. எல்லாம் சேர்ந்து வருத்தியதால், தொழிலில் கவனம் செலுத்த முடியாமல் தவித்தான். மெல்ல லாபம் நஷ்டமாக மாறியது.

ஆறுதலாக இருக்க வேண்டிய மைதிலியோ இவனை அலட்சியப்படுத்தினாள். கடன் கொடுத்தவர்கள் நெருக்கினார்கள்.

இனிக்கும் வாழ்க்கை எதிர்பார்த்த ராம் இனியும் வாழவேண்டுமா என நினைத்தான்.

முடிவுசெய்தான்.... கிளம்பினான் ... மரணத்தை தேடி....

கையில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டான். நன்றாக அவனுக்கு பிடித்த உணவெல்லாம் சாப்பிட்டான்.

தாம்பரம் ரயில் நிலையம். பீச் நோக்கி செல்லும்  ரயில் ஏறினான்... எதிரே ரயில் வரும் போதும் குதிக்க முடிவு செய்தான் ...

ரயில் கிளம்பியது ... மைதிலிக்கு ஒரு SMS ... "உலகை விட்டே செல்கிறேன், உடல் மட்டும் ரயில் பாதையில் கிடைக்கும்" ... Delivered என்று காட்டியதும் அதனை ஆப் செய்து பாதை ஓரம் வந்த ஒரு புதரில் வீசினான்.

அடுத்து எதிரில் வரும் ரயிலில் குதிக்க மனதை தயார் படுத்திக்கொண்டான்... ஒரு கணம் மைதிலியும் அவன் கடன் தொல்லைகளும் கண் முன் வந்தன .. மனதை உறுதிபடுத்தினான்... அடுத்த கணமே அவன் தாயும் தந்தையும் கண் முன் வர புன்னகையுடன் சாவை சந்திக்க தயார் ஆனான் ...

இதோ பக்கத்து டிராக்கில் எதிர் திசையில் ரயில் வருகிறது.... உலகமே அவனுக்கு அமைதியாக இருப்பதாய் உணர்ந்தான்... எந்த சத்தமும் அவன் காதுகளில் விழவில்லை...

இதோ சில நொடிகளில் அதன் முன் பாய தயார் ....

திடீர் என அவன் கால்களை இரு கைகள் கவ்வியது .... ஒரு குழந்தையின் அழுகை சத்தம் அவன் காதில் புகுந்தது ... சட்டென கீழே பார்த்தால், இரண்டு வயது மதிக்கத்தக்க குழந்தை அவன் கால்களை இறுக கட்டி கொண்டு அழுது  கொண்டிருந்தது...

நொடிகளில் மனம் தடுமாறியது ... அள்ளி அணைத்து குழந்தையை தூக்கிய அவன், அதன் கண்ணீரை துடைத்து , சமாதானப்படுத்தினான்...

அதன் கண்ணீரை துடித்த நொடியில் அவனுள் எதோ புதியதாய் உணர்ந்தான்... அவன் மனமே புதியதாய் உணர்ந்தான்... தற்கொலை எண்ணத்தையே மறந்தான்.

அந்த குழந்தை யாருடையது என்று விசாரித்தான், யாருமே அதனை உரிமை கோரவில்லை. அடுத்த ஸ்டேஷனில் இறங்கி போலீசாரிடம் குழந்தையை ஒப்படைத்தான். எல்லா இடமும் தகவல் பறந்தது.

சிறிது நேரத்தில் வேறு ஒரு  ஸ்டேஷனில் அதன் தாய் உள்ளதாகவும், ரயில் நெரிசலில் குழந்தையை தவறவிட்டதாகவும் தகவல் சொன்னார்கள். அவர்கள் வந்ததும் பார்மாலிட்டிஸ் முடித்து விட்டு செல்ல சொன்னார்கள், ரயில் நிலைய போலீஸ் அதிகாரிகள்.

சிறிது நேரத்திலேயே பதறிய படி அந்த குழந்தையின் தாயும் தந்தையும் வந்தனர்... ஒரு மணி நேரத்திற்கு பின்பு அதிகரி அழைத்து ஒரு ரிப்போர்ட்டில் கையெழுத்திட சொன்னார் ...

அந்த குழந்தையின் தகவல் இருந்த காகிதத்தை பார்த்த அவன் கண்கள் அவனறியாமல் நீரை ஊற்றியது...

பெயர் : பார்வதி
பிறந்த தேதி : இவன் தாய் இறந்த நாள்.

"சில உறவுகள் ஜென்மங்கள் தாண்டியும் நீளும் ...."       

வாழ்க்கை தொடரும்...

[இரண்டாம் பகுதி, இறுதி பகுதி விரைவில்]

1 comment: