Pages

Sunday, April 22, 2012

ஒரு கல் ஒரு கண்ணாடி

"மச்சி"
"ம்ம்ம்"
"ஒரே கடுப்பா இருக்குடா"
"ஏன்டா"
"எங்க போனாலும் ஒரே பிரச்சனையா இருக்குடா"
 "என்ன பிரச்சனை"
"எல்லாம் ஒரே லூசுங்களா இருக்குதுங்க"
"யாரு"

"எங்க ஆபிஸ்ல மேனேஜர் இல்ல, அவன் அப்படித்தான் சுத்த சைக்கோவா இருப்பான் போல, கொஞ்சம் நேரம் சும்மா இருந்தா போதும். உடனே வந்துடுவான். இத முடிச்சியா, அத முடிச்சியான்னு நச்சு பன்றாண்டா. இல்லேன்னா இது பண்ணு அது பண்ணுன்னு சொல்லிட்டே இருக்கறாண்டா"
"விடு  மச்சி எல்லா ஆபிசும் அப்படித்தான்"
"ஆமாடா அதனாலத்தான் அவனெல்லாம் உயிரோடவே விட்டு வேச்சுருக்கேன்"
"விடுறா இதெல்லாம் ஒரு பிரச்சனையாடா"

"இல்லடா அங்கதான் அவனோட தொல்லைனா, இங்க வீட்டுக்கு வந்தா, பக்கத்து வீட்டுக்காரன். சுத்த லூசுடா, அவன் வண்டில கண்ணாடி ஒடஞ்சுடுச்சு, அதுக்கு வந்து எங்க அம்மாகிட்ட நான்தான் ஓடச்சேன்னு சொல்றான்"
"அடப்பாவி அவன் ஏன் அப்படி சொல்றான், ஓங்கி ஒரு அப்பு விட வேண்டியதுதான"
"இல்லடா அவன் வயசானவண்டா, பாவம்டா, அவன் பாக்குறப்போ வண்டிகிட்ட நான் நின்னுட்டு இருந்தேனாம்..."
"நெஜாமேவே லூசுதாண்டா, அப்புறம் வேற... "

"அப்பறம் என் கூட காலேஜில படிச்சானே கிருஷ்ணா"
"ஆமா, அவனுக்கு என்ன"
"நம்ம மளிகை கடை அண்ணாச்சிய புடிச்சு கடிச்சு புட்டான், கடிச்சது கூட பரவால்ல, கடிச்சுபுட்டு நேரா எங்க வீட்டுக்கு வந்துட்டான்.

"அடப்பாவி பயலே, உனக்கு மட்டும் ஏன்டா இப்படி நடக்குது"
"எல்லாம் ஒரு சாபந்தான்டா"
"சாபமா , ஏன்?"
"ஆமாடா... சின்ன வயசுல எனக்கொரு அண்ணன் இருந்தான், அவனுக்கு கொஞ்சம் புத்தி சரியில்ல, அவன எங்கம்மாவும் மாமாவும் ஏர்வாடில கொண்டு போய் விட்டுட்டாங்க, நான் எவ்வளவோ சொன்னேன்... அண்ணன் இங்கயே இருக்கட்டும்னு ஆனா யாரும் கேட்கல, அவன் அங்கயே ரெண்டு வருஷத்துல செத்து போய்ட்டான், அந்த சாபந்தான் என்னைய வெறும் லூசுங்களா சுத்துங்க"

அதே நேரம் :

அவன்  வீட்டு சமையலறையில் இருந்து அவன் அம்மா, "டேய் கிருஷ்ணா, சாப்ட வாடா நேரம் ஆகுது"

அரசு மருத்துவமனை வாசல், போனில் ஒருவர், "ஆமா சார், அவன்தான் காலைலருந்து எந்த வேலையுமே செய்யாம சும்மா செவுத்த பாத்துக்கிட்டேருந்தான் சார், நாலஞ்சு தடவ என்னடான்னு கேட்டேன், கிட்ட இருந்த பாட்டில எடுத்து மண்டைய ஓடச்சுட்டான் சார். போனா போகுது உயிரோட விடறேன்னு சொல்லிட்டு போய்ட்டான் சார்."

ஏர்வாடி, தலைமை மருத்துவர் அறை, "என் தங்கச்சி பையன்தான் சார், பன்னெண்டு வருஷம் முன்னாடி இங்க கொண்டாந்து விட்டோம் சார். ரெண்டு வருஷத்துல சரியாகி கூட்டிட்டு போய்ட்டோம், இப்ப மறுபடி பிரச்சனை பண்றான் சார், அதான் அவன் ரெக்கார்ட் எல்லாம் வாங்கிட்டு வர சொன்னாரு எங்கூரு டாக்ட்டர்"

மளிகை கடை அண்ணாச்சி , "ஆமாய்யா, நேத்து சாயந்திரம் வந்தான். ஒரு கால் மணி நேரம் நம்ம கடை வாசல்ல நின்னு சிரிச்சுகிட்டே இருந்தான். நானும் எதோ போன்ல பேசுறானோன்னு நெனைச்சேன். அப்பறம் என்னாடான்னு கிட்ட போயி பாத்தா என்னைய கடிச்சு வெச்சுட்டு போய்ட்டான். வீட்ல போயி கேட்டா ஒண்ணுமே நடக்காத மாதிரியே பேசுறான்"

அவன் வீட்டு வாசலில், "சரி மச்சி, எங்கம்மா சாப்ட கூபுட்றாங்க, நான் வரேன், நீ கெளம்பு" என சொல்லிக்கொண்டே அருகில் கிடந்த கல்லை எடுத்து, அதுவரை அவன் பேசிக்கொண்டிருந்த கண்ணாடியை உடைத்து விட்டு வேகமாய் உள்ளே சென்றான்.

1 comment:

  1. நீ எப்படி இந்த கேரக்டெறவே மாதிரி கத எழுதுனியா கிருஷ்ணா....

    ReplyDelete