Pages

Monday, February 6, 2012

பொ பொ பொ

ஒரு சொம்பு  நெறைய நல்லா சிலுப்பின மோரு, ஒரு தட்டுல அறிஞ்சு மொளகாதூள் உப்பு போட்ட மாங்கா. பாக்கும்போதே நாக்குல எச்சு ஊருது. இந்த வெயிலுக்கு வேற என்ன வேணும்...

"தாத்தா எங்க ", ஏதேனும் மாறியிருக்கிறதா என நோட்டம் விட்டுக்கொண்டே முதல் கேள்வியை தொடுத்தான்.

"என்ன கண்ணு பாக்குற எல்லாம் அப்புடியேதான் இருக்கு"

இந்த காலத்துலயும் இப்படியா. ஆமாம், வெறும் ஒரே ஒரு பழைய ரேடியோ மட்டுமே.  இவங்களால எப்படி ஒரு டி.வி கூட இல்லாம இருக்க முடியுது. மாசத்துல ரெண்டு தடவயாவது வருவான், ஆனா இன்னைக்கு தான் அவனுக்கு கேக்கணும்னு  தோனியது .

"ஏன் பாட்டி இன்னும் இந்த கூர வீட்லயே இருக்கீங்க.. ஓடாவது போட்டுக்கலாம்ல"

"இதே  நல்லாருக்கு, போதும் கண்ணு ... நல்லா காத்தோட்டமா வசதியாத்தான இருக்கு "

ஆமால்ல .. நாமதான் பொட்டி பொட்டியா வீடு கட்டி ஆளுங்கள அதுல அடைச்சு கொல்றோம். இங்க அப்படியெல்லாம் இல்லையே, பயமே இல்லாம நிம்மதியா வாழலாம்ல. எல்லாம் வேகமா நடக்கனும்னு நெனச்சு நம்ம வாழ்க்கையவே வேகமா முடிச்சிக்கிறோம்

பாட்டி, "ஆமா,  அம்மாக்கு முட்டி வலி எப்புடி இருக்கு?"

" டாக்டர் தெனமும் கொஞ்ச தூரம் நடக்க சொல்லிருங்காங்க. பக்கத்துல ஒரு பார்க்குக்கு டெய்லி போறாங்க.  இப்போ கொஞ்சம் பரவல்ல... நீயும் நட பாட்டி நல்லது"

"அதான்  இங்க காலங்காலமா நடக்கறோமே. இங்க காட்ல நடக்கறோம் கோவில சுத்துறோம். நீங்க புல்லுல நடக்கறத நாங்க கல்லுல நடக்கறோம், ஒடம்புக்கு  இதே  நல்லதுதான" என சொல்லிக்கொண்டே, தாத்தா வருவதை பார்த்துட்டு,  "இந்தா... வந்துட்டாங்க... ", என்றாள்.

"வா கண்ணு... நல்லாருக்கியா.. பஸ்சு நிக்கரப்பவே நெனச்சேன நீயாதான் இருப்பேன்னு  ... " என கூறிக்கொண்டே தாத்தாவின் வழக்கமான விசாரிப்புகளை தொடங்கினார், ஆனால் அதில் அக்கறை தெரிந்தது.

பேசிக்கொண்டே இருக்கும் போது கேட்டான், " ஏன் தாத்தா ஒரு டி.வி ஒன்னு  வெச்சிகிலாம்ல.."

"ம்க்கும் .. அது என்னத்துக்கு கண்ணு "

"நீங்க இப்படித்தான் தாத்தா, இன்னைக்கு அறிவியல் எவ்ளோ வளந்துடுச்சு... ட்ராக்டர் வாங்குங்கன்னு சொன்னத்துக்கும் இப்படிதான் சொன்னீங்க"

"கண்ணு.. என்னதான் அறிவியல் வளந்தாலும், நெல்லு நெலத்துலதான வெளையனும்... டி.வி பொட்டி பாக்குறதுக்கெல்லாம் நேரம் எங்க...  இந்த காட்டு வேலைய பாத்துக்கிட்டு இருக்கற ஆடு மாடு கோழி கிட்ட பேசவே நேரம் செரியா இருக்கு..."

என்னது... நமக்கு கூட இருக்கறவங்ககிட்ட  பேசவே நேரமில்ல இவங்க ஆடு கோழி கூடல்லாம் பேசுவாங்களா ... என அவன் நினைக்கும்போதே சரியாக ஒரு கோழி கூவியது.

"அத செத்த நேரம் தொறந்துவுடு,  கத்திகிட்டே கெடக்கும் ...", தாத்தா சொல்ல, பாட்டி, 'பொ பொ பொ ' என்றவாறே போய் திறந்து விட்டாள், இதுதான் கோழியின் பாஷையோ ...

"அதுக்கு அப்படியே தீனி வெச்சுட்டு , அதுகள எதுவும் கவ்விட்டு போய்டாம பாத்துக்கோ", என பாட்டிக்கு உரக்க சொன்னார் தாத்தா.

இவனுக்கோ மனதில், "அங்கல்லாம் நம்மள சாப்டியான்னு கேக்க கூட ஆள் இல்ல... இவங்க கோழிய  கூட எவ்ளோ அக்கறையா பாத்துக்கறாங்க"

"அப்படியே முனியன்ட்ட தண்ணி பாஞ்சுடுச்சுன்னா மோட்டர ஆப் பண்ண சொல்லு", என தாத்தா சொல்லி முடிக்க... இவன், "ஆமா, எல்லா வேலையும் நீங்களே செய்யுங்க, இல்லேன்னா அடிமைமாறி ஆளுங்கள வெச்சுகிட்டு வேலை வாங்குறீங்க"

"அடிமையெல்லாம் இல்லப்பா .. அவன் செய்யுற வேலைக்கு நான் கூலி தரேன், குடுக்குற காசுக்கு வேலை வாங்கிக்கிறேன்... அவனால் முடிஞ்சத செய்யுறான்..  நான் மொதலாளி, அவன் வேலைக்காரன் அவ்ளோதான். கொறச்ச காசோ இல்ல அதிகமாவோ காசு குடுத்து, முடியலைனாலும் நான் சொல்றதெல்லாம் செய்யணும்னு நெனச்சாதான் அவன் அடிமை ..."

இவன் தலையில் சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது ...அதன் பிறகு தாத்தா பேசியதெல்லாம் காதுகளை தொட்டதே தவிர அதை தாண்டவில்லை... அவன் மூலையில் தான் செய்யும் வேலை பற்றி ஒரு சோக படம்தான் ஓடியது ... 

"அப்போ நான்தான் அடிமையா "

" ஒரு நிமிஷம் தாத்தா ... ", எதோ போன் வந்தது போல் வெளியே வந்து நின்று கொண்டான்... களத்தில்  சுதந்திரமாய் கோழிகள் ஓடிக்கொண்டிருந்தன.

சட்டென அவனை அறியாமல், கண்ணில் தொடங்கி கன்னம் வந்தது ஒரு துளி  கண்ணீர் .. மனதுக்குள் நினைத்தான்...
"நாமளும் சாகறதுக்குள்ள ஒரு தடவையாவது வாழ்ந்துடணும்"

**********************************************************************************


No comments:

Post a Comment